தாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்…
தனது இரு குழந்தைகளுடன் வேலை தேடி உளுந்தூர்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பசி, தாகம் மற்றும் இந்த கடுமையான வெயில் இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நடந்தே வந்துள்ளார் ராஜாராம்.
“மூனு வருசத்துக்கு முன்னால என் மனைவி இறந்ததும் பெங்களூரிலிருந்து சென்னை பெரியபாளையம் வந்து ஒரு தனியார் முதலாளிகிட்ட டிரைவரா வேலை செஞ்சேன். இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் என் முதலாளி என்னை வீட்டை காலி பண்ண சொல்லிடவும் உளுந்தூர்பேட்டையிலுள்ள சொந்தக்காரங்க வீட்ல போய் தங்கியிருந்தோம். ஆனா அங்க எங்க சாப்பாட்டு பிரச்னையாலயே அவங்க கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சது. அதான் வேலை தேடி சென்னைக்கு கிளம்பிட்டேன்” என்கிறார் 12 வந்து வர்ஷிணி மற்றும் 8 வயது சூரஜ்ஜின் தந்தை ராஜாராம்.
கூடவே இவர்களது வளர்ப்பு நாய் ராக்கியுடன் நடந்தே பயணத்தைத் தொடங்கிய இவரின் கையிருப்பு பாதி வழியிலேயே கரைந்து விட, “வழில பாக்குறவங்க சாப்பாடு வாங்கித்தருவாங்க. ஒரு சிலர் பணமாகவும் தருவாங்க. சில நேரங்களில் பசியோடயே தான் நடந்து வந்தோம். நைட்ல பசங்களை பார்த்துக்கிறனும்னு நான் தூங்காம முழிச்சிருப்பேன். பகல்ல கொஞ்ச நேரம் தூங்கிக்குவேன்” என்று விவரிக்கிறார்.
ஒருவாரத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில், ஒரு பஸ் நிறுத்தத்தில் இவர்களை கண்ட அட்சயக்குமார் என்பவர் உடனடியாக செக்ரட்ரியேட்டில் பணிபுரியும் தனது நண்பரை தொடர்பு கொண்டு விபரம் சொல்லி உதவி கேட்க, அவர் சமூக நலத்துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்த அவரும் அத்துறையினரை நாடியுள்ளார். சமூக நலத்துறை இணை இயக்குனர் திரு. தனசேரபாண்டியன் விபரம் அறிந்தவுடன் உடனடியாக செயல்பட்டு, குழந்தைகளைக் குழந்தைகள் நலத்துறையினர் முன் ஆஜர்படுத்தி அவர்களை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.
ராஜாராமுக்கு ஒரு நிரந்தர பணிக்கும் மற்றும் அவர்களுக்குத் தங்கவும் ஓர் ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சீக்கிரமே தனது குழந்தைகளுடன் இணைய காத்திருக்கிறார் இந்த கொடூர வெயிலில் 200 கிமீ நடந்தே வந்த துணிச்சல்காரர் ராஜாராம்
– லெட்சுமி பிரியா