விழுப்புரம்: ராமதாஸ் அன்புமணி மோதல் காரணமாக,  திண்டிவன வன்னியர் சங்க கட்டடத்திற்கு வருவாய்த்துறை சீல் வைத்துள்ளது. இரு தரப்பும் சங்கத்துக்கு உரிமை கோரி பிரச்சினை செய்ததால்,  அக்கட்டிடத்திற்கு  வருவாய்த் துறை சீல் வைத்துள்ளனர்.

பாமகவை கைப்பற்ற தந்தை ராமதாஸ் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் தான்தான் கட்சி தலைவர் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலும் இருந்து ராமதாஸ் நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதனால், இருவருக்கும் இடையே  அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு முன்பு, அலுவலகம் யாருக்கு என்பதில்,   ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இந்த  அலுவலகத்தில்,  இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் படங்களுக்கு,  ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி பாமக சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

தற்போது பாமக இரண்டாக பிரிந்துள்ளதால், இந்த சங்க அலுவலகத்தை கைப்பற்ற இரு தரப்பும் முயற்சித்து வருகிறது. வரும் 17-ஆம் தேதி வன்னியர் தியாகிகள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு அன்புமணி தரப்பினர் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய ராமதாஸ் ஆதரவாளர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில்,  வன்னியர் சங்க கட்டடத்திற்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டதால், இரண்டு தரப்பினர் இடையிலான வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் , இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் உரிமையியல் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக வன்னியர் சங்க கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால், விரைவில் பாமகவின்  மாம்பழம் சின்னத்துக்கும் சிக்கல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.