டில்லி:

வடகிழக்கு டில்லியை சேர்ந்தவர் சுதீஷ்குமார். இவருக்கு 7ம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் இருந்தார். கடந்த 7ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தார். சம்பவத்தன்று மாலை 5.30 மணிக்கு திண்பண்டங்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து டில்லி வடகிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சிங்லா கூறுகையில், ‘‘அவரது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிறுமி தனியாக தான் சென்றுள்ளார்’’ என்றார்.

தொடர்ந்து சுதீஷ்குமார், அவரது உறவினர்கள் சோனு, மோனு, குல்தீப், நரேஷ் ஆகியோர் சிறுமியை தேடிய போது கஜிதாபாத் அருகே டிரோனிகா நகரில் சிறுமி இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து உ.பி. மாநிலம் காவாலா நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கஜிதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி வீட்டில் இருந்து காவாலா நகர் வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமி ஹெல்மெட் அணிந்த ஒருவருடன் டூவீலரில் சென்றது தெரியவந்தது. போலீசார் கூர்ந்து கவனித்ததில் அவர் சிறுமியின் தந்தை சுதீஷ் குமார் போல இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அந்த சிறுமி ஒரு பையனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவரிடம் நெருங்கி பழகிவந்தார். இதை சுதீஸ் குமார் கண்டித்தார். ஆனால், அந்த சிறுமி பையனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. சம்பவத்தன்று திண்பண்டம் வாங்க சென்ற சிறுமியை சுதீஸ்குமார் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி பையனுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மகளை டூவீலரில் கடத்திச் சென்று கஜிதாபாத் அருகே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டிலும், போலீசிலும் நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.