டெல்லி: பெற்ற தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த, குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நமது நாட்டில் பொதுவாக குழந்தைகளின் தந்தை பெயரை மட்டுமே இனிஷியலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன யுகத்தில் சிலர் தாய், தந்தை ஆகியோரின் இனிஷியலைக்கொண்டும் உள்ளது. இருந்தாலும் ஆணாதிக்கத்தின் பயனமாக தந்தையின் பெயரே இனிஷியலாக பயன்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, டெல்லியை சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகளின் ஆவணங்களில் தனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்த உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, மனுதாரரின் வழக்கறிஞர், கணவரை பிரிந்த மனைவி, தனது மகளுக்கான ஆவணங்களில் அவர் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தி இருக்கிறார். மனுதாரரின் மகள் மைனர் என்பதால், இதுபோன்ற விவகாரங்களில் அவரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிறுமியின் பெயருடன் அவர் தந்தையின் பெயரையும் இணைத்து இன்சூரன்ஸ் செய்யப் பட்டுள்ளது. தாயின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தினால், அதை பெறுவதில் சிக்கல் ஏற்படும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ‘ குழந்தையிடம் தனது பெயரைதான் பயன்படுத்த வேண்டும் என்று, ஒரு தந்தை கட்டாயப்படுத்த முடியாது. குழந்தை, தாயின் இன்ஷியலால் மகிழ்ச்சி அடைந்தால் உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பியதுடன், அனைத்து குழந்தைகளும் அம்மாவின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தலாம். அதற்கான உரிமை இருக்கிறது என்று அதிரடியாக கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.