ஐதராபாத்
மொபைலுக்கு அடிமையாகிய மகனுடைய கையை அவர் தந்தையே வெட்டி உள்ளார்.
ஐதராபாத் நகரில் கசாப்புக் கடை நடத்தி வருபவர் 45 வயதான குரேஷி. குரேஷியின் மகன் அந்தப் பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய மொபைல் ஃபோன் வாங்கி உள்ளார். அன்று முதல் எப்போதும் மொபைலும் கையுமாகவே இருந்திருக்கிறார்.
மொபைலில் வீடியோ பார்ப்பது, பாட்டு கேட்பது என அதே வேலையாக இருந்துள்ள மகனை குரேஷி கண்டித்துள்ளார். அடிக்கடி மொபைலை பயன்படுத்தி அதற்கு அடிமை ஆகக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மகன் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் இரு தினங்களுக்கு முன் தந்தைக்கும் மகனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் குரேஷியின் கையை அவர் மகன் கடித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குரேஷி தனது மகன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது கத்தியை எடுத்து மகனின் கைகளை வெட்டி உள்ளார். அலறி அடித்துக் கொண்டு மகன் எழுந்து கதறி உள்ளார். இதனால் பதறிப்போன குரேஷியின் மனைவி இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.