சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து, வரும் 24ந்தேதி 24மணி நேரம் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஆண்டுகளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தின. இதுதொடர்பாக ஏற்கனவே பல முறை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இநத் நிலையில், சென்னையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தொழிலாளர்களின் பணிக்காலத்தில் சேமிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.15 ஆயிரம் கோடி போக்குவரத்துக்கழகங்கள் செலவிட்டுள்ளன.
இதன் காரணமாக பணி ஓய்வு பெறுபவர்கள் வெறும் கையுடன் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. 18 மாதங்களாக ஓய்வு பெற்ற 6000 தொழிலளார்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 90 ஆயிரம் பேருக்கு 102 மாதங்களாக அகவிலைப்படி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு வழங்குவது போல் மருத்துவ காப்பீடும் வழங்கப்படுவதில்லை. உடனடியாக அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்.
2003 ஏப்.1க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என்பதை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பிரிவுகளில் காலியாகவுள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் செய்ய வேண்டும்.
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்
உள்பட பல கோரிக்கைளை வலியுறுத்தி ஜூன் 10 முதல் 15 வரை வாயில் கூட்டங்கள் நடத்தவும், ஜூன் 24 அன்று அனைத்து டெப்போக்களின் முன்பும் உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டம், 24ந்தேதி காலையில் தொடங்கி 25 காலை வரை 24 மணி நேர உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.