மும்பை
மகாராஷ்டிரா செல்ல வேண்டிய ரெயிலுக்கு தவறான பாதையில் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மத்திய பிரதேசம் சென்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று விவசாயிகள் பேரணி டில்லியில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு சுமார் 1500 விவசாயிகள் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திரும்பிச் செல்ல சிறப்பு ரெயில் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். 200 பெண்கள் உட்பட மொத்தம் 1494 பேருக்கு அந்த ரெயிலில் பதிவு செய்யப்பட்டு ரூ.39 லட்சம் கட்டணம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரா ரெயில் நிலையத்தில் ரெயில்வே நிர்வாகம் தவறான சிக்னல் அளித்ததால் அந்த ரெயில் மகாராஷ்டிரா செல்வதற்கு பதில் மத்தியப் பிரதேசம் சென்று விட்டது. ஆக்ராவை தாண்டியதும் ராஜஸ்தான் கோட்டா வழியாக செல்ல வேண்டிய ரெயில் 160 கிமீ சென்று குவாலியர் அருகில் உள்ள பான்மோர் ரெயில் நிலையத்தை அடைந்தது. தவறான இடத்தில் இறங்கிய விவசாயிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இரவு 10 மணிக்கு ரெயிலில் ஏறி தூங்க ஆரம்பித்த பயணிகள் காலை ஆறு மணிக்கு எழுந்து தாங்கள் பான்மோர் ரெயில் நிலையத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
பான்மோர் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின் பயணிகள் பொறுமை இழந்து அங்கு சென்ற சரக்கு ரெயிலை நிறுத்தி மறியல் செய்துள்ளனர். அதன் பிறகு அதே ரெயிலை திருப்பி அனுப்ப ஆவன செய்வதாக அதிகாரிகல் தெரிவித்துள்ளனர். இன்று கிளம்பும் அந்த ரெயில் அனேகமாக நாளை போய் சேரலாம் என எதிர்பார்க்கப் படுவதாக பயணிகள் கூறி உள்ளனர்.