திண்டுக்கல்

முருங்கைக்காய் விலை கடுமையாக குறைந்ததால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சாலையோரம் வீசி விட்டு சென்ருள்ளனர்.

கத்தரி, வெண்டை, முருங்கை, பாகற்காய், தக்காளி, அவரை, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் போன்றவை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு தற்போது முருங்கைக்காய் கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முருங்கைக்காய்க்கு  உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்கான கொண்டு வந்த முருங்கைக்காய்களை திண்டுக்கல் காய்கறி சந்தை அருகே சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் விவசாயிகள் வீசிச் சென்ற முருங்கைக்காயை எடுத்து சென்றனர். தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து, அதிக அளவில் செலவு செய்து சாகுபடி செய்யும் காய்கறிகள், பழங்கள், பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் காய்கறிகளை சாலையோரம் வீசி செல்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்,