மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம்துலே பகுதியை சேர்ந்தவர் தர்மா படீல் (வயது 84). விவசாயி. அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இவரது 5 ஏக்கர் நிலம் அர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இழப்பீடாக ரூ. 4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. அதே பகுதியில் இவரது நிலத்தின் பாதி அளவு நிலம் கொடுத்த ஒரு விவசாயிக்கு இழப்பீடாக ரூ.1.89 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

குறைவாக வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து முறையீடு செய்யவும், அதிக இழப்பீடு பெறுவதற்காகவும் எரிசக்தி துறை அமைச்சர் சந்திரகாந்த் பவான்குலேவை சந்திக்க கடந்த 22ம் தேதி தர்மா படீல் தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு வந்தார். அவரை சந்திக்க அமைச்சர் மறுத்துவிட்டார். இதற்கு முன்பே பல அதிகாரிகளை பார்ந்து நொந்து போயிருந்த தர்மா படீல் மனமுடைந்து மந்திராலயாவிலேயே விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கடந்த 28ம் தேதி இறந்தார்.

மராத்தா சமுதாயத்தை சேர்ந்த தர்மா படீலின் மரணம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொடர்புக்கு ஏற்பட்ட பேரழிவு என்ற கருத்து எழுந்தது. பாஜக தலைமையிலான அரசுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

‘‘தர்மா படீல் மரணத்திற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமாக அமைந்துள்ளது. இது தற்கொலை அல்ல, கொலை. அவர் அரசு நிர்வாகத்தின் அனைத்து மூலை முடுக்குக்கும் அலைந்து திரிந்துள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்’’ எனுறு சுவமிமணி சேத்கரி சங்கதானா அமைப்பை சேர்ந்த ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு பாஜக.வுடன் கூட்டணி வைத்திருந்தது. கடந்த ஆண்டு கூட்டணி முறிந்துவிட்டது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொலைபேசி மூலம் தர்மா படீல் மகனுடன் பேசிய பின்னரே உடலை வாங்க அவரது குடும்பத்தினர் ஓப்புக் கொண்டனர்.

2013ம் ஆண்டு விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் ‘‘அணையில் தண்ணீர் இல்லை. நாங்கள் தான் அணைக்கு சென்று சிறுநீர் கழிக்க வேண்டும்’’ என்று நக்கலாக பதிலளித்தார்.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக 2014ம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது தர்மா படீல் தற்கொலை மூலம் பாஜக.வுக்கு இதேபோன்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

[youtube-feed feed=1]