மும்பை: கடந்த 4 ஆண்டுகளில் மராட்டிய மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தின் கிட்டத்தட்ட பாதி பகுதி, வறட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த அதிர்ச்சி விஷயம் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-14 இடைபட்ட நான்காண்டு காலங்களில், அம்மாநில விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 6,268 என்பதாக இருந்தது.
ஆனால், அந்த எண்ணிக்கை 2015-2018 இடைபட்ட 4 ஆண்டு காலத்தில், இருமடங்காக உயர்ந்து, 11,995 என்ற அபாய எண்ணிக்கையை எட்டியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், விதர்பா பகுதி எனப்படும் அமராவதி பகுதியில் 5,214 தற்கொலை மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்து, மரத்வாடா பகுதி எனப்படும் அவுரங்காபாத் பகுதியில் 4,699 தற்கொலை மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடன், செலவினங்கள் மற்றும் பயிற்முறை போன்றவைதான் விவசாயிகளின் துன்பத்திற்கு முக்கிய காரணிகள். இவைதவிர, சுகாதாரப் பிரச்சினைகள், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை, மழை பொய்ப்பு உள்ளிட்ட காரணிகளும் அடக்கம்.
மேலும், விவசாயிகளின் கொடுந்துன்பங்களை அதிகரிப்போராய் இருப்பவர்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களே என்றும் வங்கிகள் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 2017ம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடியை அம்மாநில அரசு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி