மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள மேலூரில், முல்லை பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்த விட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது . மேலும் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை, புதிய விரிவாக்க கால்வாய்களுக்கு வழங்குவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.
இதுகுறித்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட அரசு அதிகாரிகளையும், தமிழக அரசையும் கண்டித்து, மேலூரில் அருகே பல்வேறு இடங்களில்வி வசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மதுரை புறவழிச்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விவசாயிகளின் போராட்டம் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும், மேலூர் பகுதி மக்களும், வணிகர்களும் இணைந்துள்ளதால்ன் போராட்டம் தீவிரமாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய விவசாயிகள், “இது எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை. இந்த உரிமையை விட்டுக்கொடுத்தால், எங்கள் பகுதியில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் ஏற்பட்டுவிடும். எனவே, எங்களுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை முறையாக அரசு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்” என்று தெரிவித்தார் .
இதன் காரணமாக திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை காத்து கிடக்கிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்களிடம் செயற்பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் கண்டனம்
இதுகுறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸடாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
முதல்வர் தொடங்கி எம்எல்ஏ உட்பட்டவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க நேரம் ஒதுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், விவசாயிகள் 5 மணி நேரமாக மதுரை திருச்சி தேசிய நெஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள், நேரில் சென்று சந்தித்து அவர்களின் கோரிக்கை கேட்க நேரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.