நெய்வேலி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் விவசாய கூட்டமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நெய்வேலியில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு, நெய்வேலியில் இருந்து 1 யூனிட் மின்சாரம் கூட வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் லாரிகளிலும், டிராக்டர்களிலும் வந்து நெய்வேலி ஆர்ச்கேட் அருகே குவிந்தனர்.
அங்கிருந்து அவர்கள் நெய்வேலி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மாநிலத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் பட்டை நாமம் வரைந்த பேப்பரை சட்டையில் குத்தியிருந்தனர். மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கோஷமிட்டபடி வந்தனர்.
ஊர்வலம் நடைபெற்றதையொட்டி என்.எல். சி. தலைமை அலுவலகம் மற்றும் ஆர்ச்கேட் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி முற்றுகையிட முயன்ற 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தையொட்டி நெய்வேலியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக மாநில தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீடு ஒழுங்குமுறை வாரியத்தை ஓரிரு வாரங்களில் அமைக்க வேண்டும்.
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமாட்டோம் என்று கர்நாடக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் அனுப்ப கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வதங்கியுள்ளன. எனவே தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.