டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 21வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் , இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டங்களால், குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி சலோ என்ற பெயரில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 21வது நாளாக தொடர்கிறது. இது தொடர்பாக அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற 6 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.