டில்லி:
கொட்டும் மழையில் தலைநகர் ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மீண்டும் டில்லியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் டில்லியில் உள்ள பிரதமர் வீடு முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகளை, போலீசார் தடுத்து நிறுத்தி ஜந்தர் மந்திருக்கு திருப்பி அனுப்பினர்.
விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் டில்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
தொடர்ந்து 41 நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னையில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். அப்போது முதல்வர் பழனிசாமி அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் ஏதும் நிறை வேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள், டில்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லி சென்றுள்ள விவசாயிகள் நேற்றுமுன்தினம் , பிரதமர் வீடு முன் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, போலீசாரால் தடுக்கப்பட்ட அவர்கள், வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டில்லியின் முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று, இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
அதையடுத்து டில்லி ஜந்தர் மந்தரில் கொட்டும் மழையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் வேளையிலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையிலும் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கி இருப்பது பாராளுமன்றத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.
டில்லியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பிரோஸிஷஹ் சாலை மற்றும் விஜய் சௌக் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.