டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தின் அறிவித்து உள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 85வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், ஜனவரி 26ந்தேதி பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கடந்த பிப்ரவரி 6ந்தேதி சக்கா ஜாம் என்ற பெயரில் நாடு முழுவதும் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். அதன்படி, நாளை கர்நாடக மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18-ந் தேதி(நாளை) கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திஷா ரவியை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.