சென்னை:
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் ஜனவரி 2-ம் தேதி தஞ்சையில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை வரும் தமிழக ஆளுநருக்கு கறுப்புக்கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் கோவை உள்பட சில மாவட்டங்களில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழக அரசின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கறுப்புக்கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தன. நெல்லையிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் வரும் ஜனவரி 2ம் தேதி ஆளுநர், தஞ்சையில் ஆய்வு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அங்குள்ள சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெற இருக்கிறார். அரசியல் பிரமுகர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் தொண்டு அமைப்பினரும் ஆளுநரிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொள்கிறார். அப்போது அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.