சேலம்: 8வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று சேலம் அருகே, சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம் – சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த திட்டத்தை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஆனால், மத்தியஅரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின்போது, நிலம் கையகப்படுத்து வதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 வழி சாலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10திற்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆச்சாங்குட்டப்பட்டி அருகே உள்ள அடிமலைபுதூரில் உண்ணாமலை அம்மாள் என்ற விவசாயியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளும் விளைநிலங்களில் மண்டியிட்டு கையேந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் ஆடு, கோழி மற்றும் மாடுகளுடன் ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை, போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.