டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாளை மீண்டும் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை முடிந்து நாளை 7வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, நாளை மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், முடிவு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்களை நிறைவு செய்கிறது. விவசாயிகள் போராட்டம் நாளை 7-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வகையில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இதையடுத்து நாளை டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். ’விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம்’ என்ற தலைப்பில் இந்த டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறையினரும் குவிக்கப்பட்டு வருகின்றன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேணி வன்முறையில் முடிந்தது. காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு டெல்லிக்குள் விவசாயிகள் சென்றதும், செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் நாளை நடக்க உள்ள டிராக்டர் பேரணியால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பேரணி குறித்து கூறிய விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத், “சிசோலியில் உள்ள பாரதிய கிஷான் சங்க தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு உ.பி. மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஜூன் 26 அன்று உ.பி. கேட்டில் ஒன்றுகூடி மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டம் 7வது மாதம் தொடங்குவதை குறிக்கும் வகையில், விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் ‘டிராக்டர் பேரணி’ வடிவில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் எல்லை மற்றும் உ.பி. கேட் உட்பட பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு டிராக்டர் பேரணி புதிய உத்வேகத்தை வழங்கும். விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் ஜூன் 25 பிற்பகலுக்குள், அவர்கள் யுபி கேட்டை அடைந்து போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள்.
பின்னர் டிராக்டர் பேரணியாக தேசிய நெடுஞ்சாலை வழியாக உ.பி. கேட் செல்லும். பேரணி செல்லும் வழியில் விவசாயிகள் போக்குவரத்தை சீர்குலைக்காமல் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, அரசுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வோம், மேலும் எதிர்ப்பு அமைதியான முறையில் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.