டெல்லி: தலைநகர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அடுத்ததாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி போராட்டம் 80 நாட்களை கடந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பபெற விட்டால், போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறி விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, டெல்லியில் டிரிக்டர் பேரணி, பஸ்மறியல், ரெயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘விவசாயிகள் மகாபஞ்சாயத்’-துகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அரியானா மாநிலம் ஹிசாரில் நடந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அங்கு பேசும்போது, நாட்டின் சூழ்நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வந்துள்ளோம். அந்த அதிகார மையத்தை சரி செய்ய எங்களுக்கு ஒரு மாதம் போதுமானது. ஆளும் கட்சியினை சரியான பாதைக்கு மாற்றும் வரை நாங்கள் வீடு திரும்ப மாட்டோம்.
மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளும் நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்காகவும் நாம் போராட வேண்டி உள்ளது. நமது அடுத்த இலக்கு, கொல்கத்தாவை நோக்கி டிராக்டர் பேரணி செல்வதுதான்.
அதற்காக வளர்ந்து நிற்கும் பயிர்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டிய நிலை வந்தாலும், அதைச் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். விவசாயிகள், கிராமங்களில் பயிர்கள் அறுவடை செய்வதற்காக சென்று விடுவார்கள், அதனால் இந்த போராட்டம் நின்று விடும் என்று அரசு நினைக்க கூடாது. நாங்கள் பயிர்களை யும் அறுவடை செய்வோம். அதே நேரத்தில் போராட்டத்தையும் தொடர்வோம். நாங்கள் வீடுகளுக்கு செல்ல மாட்டோம். உங்களுடைய டிராக்டர்களில் பெட்ரோலை நிரப்பி, டெல்லியை நோக்கி திருப்பி நிறுத்துங்கள். எந்த நேரத்திலும் முன்னோக்கி வர உங்களுக்கு அழைப்பு வரலாம். விவசாய யூனியன்கள் அதனை முடிவு செய்யும்.
அரியானாவைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.