உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை பரிசாக வழங்கினர்.

பெங்களூரை அடுத்த தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சென்னராயப்பட்னா ஹோப்லி-யில் சுமார் 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வளமான, பல பயிர்கள் விளையக்கூடிய விவசாய நிலத்தில் விண்வெளி பூங்கா அமைக்க முந்தைய பாஜக அரசு 2022ம் ஆண்டு திட்டமிட்டது.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேசிய மக்கள் இயக்கக் கூட்டணி (NAPM) என்ற பெயரில் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.

ஜூன் 25ம் தேதி முதல் கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்கா அருகே தொடர் ஆர்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவசாய பிரதிநிகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை இன்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை கொண்டு சென்று முதல்வருக்கு பரிசாக அளித்ததுடன் வளமான இந்த பூமியை விண்வெளிப் பூங்கா என்ற பெயரில் சீரழிக்கவேண்டாம் என்று வலியுறுத்தினர்.