பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக தனது ஆதரவு கட்சிகளைக் கொண்டு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்த புதிய மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மசோதாவை கண்டித்து வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
மத்தியஅரசுக்கு கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி 3 நாட்கள் ரயில் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு (பாரத் பந்த்) பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.எஃப்.யூ), அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி.), அகில இந்திய கிசான் மகாசங்கம் (ஏ.ஐ.கே.எம்) ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி உள்பட 18 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் காரணமாக பல பகுதிகளில் பொதுபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.