மதுபானி, பீகார்
இந்தியாவில் பீகார் மாநில சிற்றூரில் விவசாய நிலத்தில் வந்து விழுந்த எரிகல் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மிகுந்த சத்தத்துடன் புகையைக் கக்கியபடி விவசாய நிலத்தில் வந்து விழுந்த ஒரு பொருளைப் பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் உடனடியாக அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்தக் கல் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகியிருந்தது. அவர்கள் அந்த பள்ளத்தில் இருந்த கல்லை அகற்ற முயன்றுள்ளனர். அந்தக் கல்லை அவர்கள் வெளியே இழுத்த போது ஷாக் அடிப்பது போன்று இருந்துள்ளது. ஆயினும் அது பெரிய அளவில் ஷாக் அடிக்கவில்லை.
அந்த கல் சுமார் 15 கிலோ எடையுள்ளதாக இருக்கும் எனத் தெரியவந்தது. மேலே இருந்து விழுந்த அந்த கல்லில் இருந்து புகை வந்தபடி இருந்தது. அந்த அதிசயப் பொருள் குறித்து கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அந்தக் கல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அந்தக் கல்லை ஆய்வு செய்த வல்லுநர்கள் அது எரிகல் என உறுதிப்படுத்தினர்.
எரிகல் என்பது தூசியும் பாறையும் இணைந்த பொருளாகும். விண்ணில் பூமியின் சூழ்நிலையைக் கடந்து செல்லும் போது அது எரிகிறது. தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு எரிகல் தாக்கி ஒரு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
அதைப் போல் கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் யூரல் மலைப் பகுதியில் ஒரு எரிகல் விழுந்த அதிர்ச்சியில் பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில் சுமார் 1200 பேர் காயமடைந்துள்ளனர்.