சென்னை: விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும் எஎன்றும்,  உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், பிஏசிசிஎஸ், சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப்கள் போன்றவை வட்டி மானியத்துடன் கூடிய வேளாண் உள்கட்டமைப்புக் கடன்களின் கீழ் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். 
இத்திட்டத்தின் கீழ், 2020-21 மற்றும் 2032-33 க்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம் ரூ.5,990 கோடி கடன்களை வழங்கும். இந்த நிதியளிப்பு வசதியின் கீழ் உள்ள அனைத்து கடன்களுக்கும் ஆண்டுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் ரூ 2 கோடி வரை இருக்கும்.
கிராம அளவில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக முன்வரும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் வசதி செய்து தருவதற்காக வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதி எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் குழுக்களாக இணைந்து இயந்திர வாடகை மையம், சூரிய சக்தி மோட்டாா், இயற்கை இடுபொருள்கள் உற்பத்தி, நுண்ணுயிா் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கடன்வசதி அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெற முடியும். வங்கிகள் விதிக்கும் வட்டி வீதத்தில் ஏழு ஆண்டு காலத்துக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெற்றால், ரூ.2 கோடிக்கு மட்டும் 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும், ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோா், மாநில முகமைகள் மற்றும் வேளாண் விளைபொருள்கள் விற்பனைக் குழுமங்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள் ஆகியன கடன் வசதி பெற இயலும்.

கடன் தொகையை வழங்குவதற்காக 25 வணிக வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமேயாகும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை www.agriinfra.doc.gov.in என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 2032-33-ஆம் ஆண்டு வரையில் ரூ.5,990 கோடி அளவுக்கு கடன் வசதி தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.