கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் வறட்சி காரணமாக வவசாயம் செய்ய முடியாமல், வாழ வழியின்றி விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகிவிட்டது.

தமிழர் திருநாளான குறிப்பாக விவசாயிகள் திருநாளான தை முதல் நாள் பொங்கல் அன்று, திருவாரூர் ரயில் நிலையத்தில் கூடிய விவசாயிகள், சமீபத்தில் வறட்சியால் மரமணடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.  பொங்கல் முடிந்ததும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர், இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. கடந்த 17 ம் தேதி துவங்கிய போராட்டம் இன்றுவரை இரவு பகலாக தொடர்கிறது. மாணவர்கள் துவக்கிய இந்த போராட்டத்தில், தன்னெழுச்சியாக அனைத்து தரப்பு மக்களும் பங்குகொண்டு வருகிறார்கள்.

இன்று ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடைபெறுகிறது. ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் இந்த செய்தியே முக்கியத்துவம் பெற்று வருகின்றந.

இது ஒருபுறம் நடக்க.. இன்னொரு புறம் விவசாயிகள் மரணம் தொடர்ந்து நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கீழவ்ன்னிப்படை சேர்ந்த விவசாயி கருணாநிதி நான்கு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்தார். போதிய நீர் இல்லாததால், கரும்பு கருகிப்போக, மன வேதனையில்,  கடந்த 17ம் தேதி அங்குள்ள குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சரட்டேரியை சேர்ந்த விவசாயி செல்வக்குமார், தனது வயலில் தோட்டப்பயிர்கள் பயிரிட்டிருந்தார். மேலும் இரண்டு ஏக்கர்களில் மீன்குட்டை அமைத்திருந்தார், போதிய நீர் இல்லாமல் குளம் வற்றி மீன்கள் முழுவதும் செத்துவிட்டன.  தோட்டப்  பயிர்களும் கருகின.  இதனால் வேதனை அடைந்த அவர், அதே 17ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டத்தை சேர்ந்த விவசாயி சம்மந்தம் (38). இவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். கதிர்வரும் தருவாயில் தண்ணீர் இல்லாமல் பயிர் கருக ஆரம்பித்தது. இதனால் மனம் உடைந்து புலம்பி வந்தவர், கடந்த 18ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

நாகை மாவட்டம் கோயில் கண்ணாப்பூரைச்சேர்ந்த விவசாயி வடிவேல் 19ம் தேதி காலை 9 மணிக்கு வயலுக்கு சென்றார். கருகிய பயிர்களைக் கண்டு கலங்கியவர், வியலிலேயே சுருண்டு விழுந்து இழந்தார்.

இனியேனும், தண்ணீர் பிரச்சினைக்கும், விவசாயிகள் மரணத்தைத் தடுப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.