டில்லி

வேளான் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவாலா நூதன போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  டில்லி நகர எல்லையில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களது வேளான் சட்ட நீக்கக் கோரிக்கையை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாமல் உள்ளது.

இந்த போராட்டத்துக்குப் பல அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.   டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை நேரடியாகவும் அறிக்கை மூலமும் தெரிவித்து வருகின்றனர்.   ஆனால் பாஜகவினர் இந்த விவசாயிகளைப் பிரிவினை போராளிகள் எனவும் இடது சாரி ஆதரவாளர் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.  இந்த மன் கி பாத் நிகழ்வு நடக்கும் போது அவர் பேசி முடியும் வரை அனைவரும் தட்டில் ஓசை எழுப்பி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலா நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா குறித்து பிரதமர் மோடி கை தட்டுமாறு உரையாற்றிய போது பாஜகவினர் கைகளுக்குப் பதிலாகத் தட்டுகள் மூலம் ஓசை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..