சென்னை,
தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் சாகவில்லை என்றால், வறட்சி நிவாரண நிதியாக 20ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு தற்கொலையைவிட கொடுமையானதை தமிழக அரசு செய்து வருகிறது என்றும் கூறினார்.
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த வழக்கில், அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை இல்லை என்று கூறியிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சிக் காரணம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது தற்கொலையைவிட கொடுமையானது என குற்றம்சாட்டியுள்ளார்.
“ஏற்கனவே விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற கொடுமையைவிட மிகப்பெரிய கொடுமையை இந்த அரசு அவர்களுக்கு செய்து வருகின்றது.
உச்சநீதிமன்றத்துக்கே சென்று விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் வறட்சி காரணமில்லை என்று தமிழக அரசு சொல்கிறதென்றால்,
இதே மாநில அரசு வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவித்துவிட்டு, தமிழகத்திற்கு 20,000 கோடி நிதி தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் என்ன ?”
என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.