மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோதன 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஇந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 26வது நாளை எட்டி இருக்கிறது.
இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கம், இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கி வைக்கப்பட்டு, பின்னர் அனுமதி வழங்கி சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நிலையில், நேற்று செய்தியளார்களிடம் பேசிய சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் , இன்று ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட குழு இன்று தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று 11 பேர் கொண்ட குழு 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தினசரி 11 பேர் கொண்ட குழுவினர் உண்ணாவிரதத்தை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, அரியானா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை 25-ந் தேதியில் இருந்து 27-ந் தேதிவரை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்துள்ளார்.
கடும் குளிரிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.