சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபானி புயலால், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்றும்,  கடல் கொந்தளிப் பாக காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

ஃபானி புயல் இன்று அதிகாலை, அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றவர்,  தற்போது புயல் தென்மேற்கு வங்க கடல் பகுதியில், சென்னையில் இருந்து சுமார் 525 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து பலம் பெற்று வடமேற்கு திசையில் நாளை மாலை வரை நகர்ந்து சென்று, அதன் பிறகு வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஃபானி புயல் காரணமாக குமரிக் கடல், மன்னார் வளைகுடா  மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில்  மணிக்கு 30 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்  என்றார்.

மேலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மே 2 ஆம் தேதி கொந்தளிப் பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் நாளை தென் மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

மழையை பொறுத்தவரை வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதனான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.