ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கத்தாரில் துவங்குகிறது.

இந்த போட்டிகளை காண உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்துள்ளனர்.

 

அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டிகளை நடத்த தோகா-வைச் சுற்றி ஐந்து இடங்களில் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளில் மிகவும் வித்தியாசமான பழமைவாத நாடுகளாக அரேபிய நாடுகள் உள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த சவுதி அரேபியாவில் மது வாடையே ஆகாது என்ற அளவுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது.

கத்தார் நாட்டில் விமான நிலையத்தில் உள்ள டியூட்டி ஃப்ரீ ஷாப்-களில் கிடைக்கும் மதுவகைகளைக் கூட வாங்கிக் கொண்டு கத்தாருக்குள் நுழைய முடியாது.

ஆனால், கத்தாரின் குறிப்பிட்ட சில நட்சத்திர விடுதிகளில் மட்டும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அங்கு ஒரு பிண்ட் பீர் ரூ.1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்றபடி பொதுவெளியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது தவிர கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த 2010 ம் ஆண்டே அனுமதி வழக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு ரசிகர்களை மகிழ்விக்க இங்குள்ள கால்பந்தாட்ட மைதானத்தின் அருகில் மது விற்பனை நிலையம் அமைக்க முதலில் அனுமதி வழங்கப்பட்டது.

போட்டி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பும் போட்டிமுடிந்த பின் ஒரு மணி நேரம் மட்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் மது விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

கடந்த பல மாதங்களாக மதுவகைகளை கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து விற்பனைக்கு காத்திருந்த போட்டியின் முக்கிய ஸ்பான்ஸர்களான பட்வைஸர் உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள் இந்த கடைசி நிமிட அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஃபிஃபா நிர்வாகத்துடன் கத்தாரில் உச்ச அதிகாரமிக்க சட்டக் கமிட்டி நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கத்தார் நாட்டில் பொது இடங்களில் மது விற்பனைக்கும் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் உற்சாகமிழந்துள்ளனர்.

2022 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு ?