கொல்கத்தா

நேற்று நடந்த இரண்டாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இறுதியில் சக வர்ணனையாளரைத் தரக்குறைவாகப் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவை கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி ஜடேஜாவும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.   ஆயினும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஏதாவது மோசமான விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்.

நேற்று வரை கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்பதால் பகல் இரவு போட்டி என்பதால் பின்ங் நிறப் பந்து பயன்படுத்தப்பட்டது. இந்த பிங்க் கலர் பந்தை அடிக்க இந்தியாவை விட வங்கதேச வீரர்கள் மிகம் தடுமாறினர்.  ஐந்து வீரர்கள் பந்து தாக்கி காயம் அடைந்தனர்.  இதையொட்டி இந்த பந்து கண்ணுக்குத் தெளிவாக தெரியவில்லை எனக் கூறப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து வர்ணனையாளர்கள் நடத்திய விவாதத்தில் ஹர்ஷா போக்ளே, “இந்த பிங்க் பந்து கண்ணுக்குத் தெரிகிறதா என்பது குறித்து கிரிக்கெட் வீரகளிடம் கேட்டு அறிய வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தார்.    அவர் கிரிக்கெட் விளையாடாத வர்ணனையாளர் என்பதால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இது குறித்து எங்களிடம் கேட்கக் கூடாது.  ஹர்ஷாவிடம் மட்டுமே கேட்க வேண்டும்.  ஏனெனில் அவர் மட்டுமே  இந்த ஆட்டத்தை ஆடி உள்ளார்” எனக் கேலியாக பதில் அளித்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இவ்வாறு கூறியது வர்ணனையாளர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.  ஒரு சிலர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.   பலர் இவரைப் போல் மற்றவர்களை முட்டாள்கள் என நினைப்பவர்களை இனி வர்ணனை செய்யத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறி வருகின்றனர்.