கொல்கத்தா:
ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை புரட்டிப்போட்ட நிலையில், நள்ளிரவில் மேற்கு வங்கங் தையும் தாக்கிவிட்டு பங்களாதேஷ் நோக்கி சென்றது. மீட்பு பணிகளில் மம்தா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் வடமேற்கு திசையில் பயணித்து ஒடிசா மாநிலத்தில் நேற்று கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 முதல் 245 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்றுடன் மழை கொட்டியது. பின்னர் புயலின் வேகம் சற்று தணிந்த நிலையில், நள்ளிரவில் மேற்குவங்கத்தை தாக்கியது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை 3 மணி முதல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்றும் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் கொல்கத்தா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் பரிதவித்தனர்.
தலைநகர் கொல்கத்தா, புரூலியா, ஹூக்ளி, ஹவுரா, 24 பர்கானஸ், மிட்னாபூர் பகுதிகளில் நேற்று இரவு மழையுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
ஃபானி புயல் காரணமாக, 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, புயல் பாதித்துள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஃபானி புயலின் தாக்கம் காரணமாக அண்டை மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் கிழக்கு மாவட்டங்களிலும் மழை பெய்தது. சிக்கிம், மேகாலயா, அசாமின் மேற்குப் பகுதியிலும் ஃபானி புயலால் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து மேற்குவங்கத்தை கடந்த அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி சென்ற புயல் அதிகாலையில் அங்கு மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று மட்டுமே வீசியதாக கூறப்படுகிறது.