சென்னை: கோடை வெப்பத்தை சமாளிக்க சென்னை மாநகர பேருந்து டிரைவர்களுக்கு மின்விசிறி பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.  தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக மாநிலம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.   இதற்கிடையில், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால்,   உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் காணப்படுகிறது. வாட்டி வதைத்து வரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.

கோடை வெப்பம் காரணமாக,  பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் ஏற்கனவே உள்ள வெப்பத்துடன் வாகனத்தின் என்ஜின் சூட்டோடு வெப்பமும் அதிகரித்து வருவதால், அதன்  தாக்கம் தாங்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு சமீப நாட்களாக  ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும்,  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டிரைவர்கள் சோர்வடைகின்றனர்.

இந்த நிலையில், பேருந்து ஓட்டுநர்களின் வசதிக்காக சிறிய மின்விசிறிகள் பொருத்த மாநகர போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக,  சென்னை  மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டிரைவர்களுக்கு மின்விசிறி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர்.  சென்னையில் 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுவதால், முதல் கட்டமாக 1000 பஸ்களில் மின்விசிறி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும் என்றனர்.