சென்னை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள, கேளம்பாக்கம் சுசீல் ஹரி பள்ளியை நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு தமிழ்நடிகர் சண்முகராஜன் ஆதரவு தெரிவித்து உள்ளார். சிவசங்கர் பாபா தங்கமானவர், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எல்லாம் திட்டமிட்ட சதி என தெரிவித்து உள்ளார்.
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்ட எழுந்துள்ள நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சண்முகராஜன் கருத்து தெரிவித்து உள்ளார்.
சிவசங்கர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. இது திட்டமிட்ட சதி என்று கூறும் நடிகர் சண்முகராஜன், சிவசங்கர் பாபா தங்கமானவர். பாபாவுக்கு எதன் மீது பற்று கிடையாது என்றுதெரிவித்து உள்ளார்.
நான் 6, 7 ஆண்டுகளாக சித்தர் வழிபாட்டில் இருக்கிறேன். என் குருநாதர் சிவசங்கர் பாபா. அவருடன் சுமார் 4 ஆண்டுகளாக இருந்து, அவர் பெயரில் 7 நூல்களை தொகுத்திருக் கிறேன். சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் தங்கமானவர். 20 நாட்களாக அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு 200 வீடியோக்கள் வந்திருக்கிறது. அந்த குற்றச்சாட்டை பக்தர்களாகிய நாங்கள் மறுக்கிறோம். அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை.
சுசீல் ஹரி பள்ளியில் படித்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு டிசி கொடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் தான் பத்ம சேஷாத்ரி பள்ளி பற்றி வந்ததை பார்த்து நாமும் ஆரம்பிக்கலாம் என்று பேசியிருக்கிறார்கள். பள்ளியை டேமேஜ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், சில ஆசிரியர்கள் மீது கோபம். அவர்களை பழிவாங்க பாபா மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, சாட்சிகளையும் தயார் செய்திருக்கிறார்கள்.
இது திட்டமிட்ட சதி. இந்த பள்ளியில் அனைத்து மதம், சாதியை சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள். பாபா சமுதாய சிந்தனைகள் கொண்டவர். அவருக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, எதன் மீதும் பற்று கிடையாது. ஒரு மகானை, சித்தரை இரண்டு நாட்களில் அசிங்கப்படுத்த முடியுமா?. அவர் மீது பொய்யாக அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பாபாவுக்கு உலகம் முழுவதும் 50 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் மீதான குற்றச்சாட்டுகளால் மனஉளைச்சலில் இருக்கிறோம். எதிர்தரப்புக்கு நிர்வாகம் மீது கோபம். அதற்காக பாபா மீது புகார் சுமத்துகிறார்கள்.
இவ்வாறு சண்முகராஜன் கூறியுள்ளார்.
சண்முகராஜன் வீடியோ: நன்றி Behindwoodsair