மும்பை: பிரபல இந்தி நடிகர்  சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இன்று (ஜன.16) அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த அடையாளம் தெரியாத கொள்ளையனால் கத்தியால்  தாக்கப்பட்டாதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால்  காயம் அடைந்த அவர்  தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர், சைஃப் அலிகானை அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டிற்குள் கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியது யார், அவர் உண்மையிலேயே கொள்ளையடிக்கத்தான் சென்றாரா, அல்லது கொலை செய்யும் நோக்கில் சென்றாரா,  முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை முயற்சி நடைபெற்றதா,  அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் நபரால் எப்படி வீட்டுக்குள் நுழைய முடிந்தது என்பது உள்பட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் உள்ள  சிசிடிவி காட்சிகளைக்கொண்டு கொலையாளியை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.