அர்ஜென்டைனா: உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா (வயது 60) காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எளிய குடும்பத்தில் பிறந்த மாரடோனா, தனது அபார திறமை காரணமாக, உலகம் போற்றும் உன்னத வீரராக பிலகாசித்தார். அதுபோல, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தனது இறுதிமூச்சு வரை கால்பந்தாட்டத்தை உயிர் மூச்சாக சுவாசித்தவர் டீகோ மாரடோனா.
இதுவரை அர்ஜெண்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்திருக்கும் மரடோனா, அந்நாட்டின் அணிக்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தார். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அவரது, வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
மரடோனா மறைவுக்கு அர்ஜெண்டினா நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அல்பெர்டோ பெர்ணாண்டஸ் அறிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மாரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மரடோனாவின் மறைவு உலகம் முழுவதிலும் இருக்கும் கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மறைவுக்கு பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஃபிஃபா அமைப்பு மரடோனாவை நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்து மிக உயர்ந்த கவுரவத்தை கடந்த 2000-ம் ஆண்டு வழங்கியது. இவர் அர்ஜெண்டினா அணிக்கு மட்டும் விளையாடாமல் நபோலி, பார்சிலோனா அணிகளுக்காகவும் விளையாடி பெரும் பெயரை பெற்றவர்.
மரடோனா மறைவுக்கு பத்திரிகை.காம் இணையதளமும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.