சென்னை: சென்னை, மதுரையில் கிளைகளை கொண்டுள்ள பிரபல நகைக்கடை அதிபர், தீபாவளி போனஸாக தனது கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் வகையில், சிற்நத  ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகளை போனஸாக வழங்கி அசத்திஉள்ளார். தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கார் மற்றும் பைக்குகளை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது.  தீபாவளியையொட்டி, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழக்குவது வாடிக்கை. குறைந்த பட்சம் ஒரு மாதம் சம்பளம் முதல் அதிகபட்சம் 3 மாதம் சம்பளம் வரை போனஸ் வழங்கப்படுவது, தமிழகத்தில் வழக்கமாக உள்ள நடைமுறை. சாதாரண மளிகை கடைகளில் கூட 3 மாத சம்பளம் போனஸ் வழங்கப்படும். ஆனால், தற்போதுள்ள பெரும் வணிகர்களும் சரி, நிறுவனங்களும் பழைய   நடைமுறைகளை கடைபிடிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, தமிழர்கள், தங்களிடம் பணியாற்றும் சக  தொழிலாளர்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.

இந்த நிலையில்தான், தமிழர்களுக்கு பாடம்புகட்டும் வகையில் வடஇந்திய தொழிலதிபர் அவரது நிறுவனத்தில் பணியாற்றி 100க்கும் அதிகமான தொழிலாளர்களில் சிறந்த நபர்களை தேர்வு செய்து, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களை அனைவரையும் குடும்பத்துடன் வரவழைத்து, சிறப்பு உணவு வழங்கி, அவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி  வழங்கி அசத்தி உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக்கடையின் உரிமையாளர் ஜெயந்திலால் சயந்தி என்பவர் தனது ஊழியர்களுக்கு ரூ. 1.2 கோடி ரூபாய்க்கு போனஸ் வழங்கி அசத்தியுள்ளார். அதாவது  8 கார்கள் மற்றும் 18 பைக்குகளை வாங்கி ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார்.

சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் தனது  நகைக்கடையின் 10வது ஆண்டுவிழா மற்றும் தீபாவளியையொட்டி,  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கெட் டூ கெதர் பார்ட்டி நடத்தப்பட்டது. இதில் அங்கு பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், மிகச்சிறப்பாக பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு காரும், 18 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசளித்து கவுரவிக்கப்பட்டது

இதுகுறித்து ஜெயந்தி லால் சயந்தி கூறுகையில், “இது அவர்களின் (ஊழியர்கள்) வேலையை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்றவர், தொழிலில் உண்டான ஏற்றத் தாழ்வுகள் அனைத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி, எனக்கு லாபம் ஈட்ட உதவியவர்களுக்கே நான் நன்றிகடன் செய்துள்ளேன். அவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, எனது குடும்பமும் கூட. அவர்களுக்கு இதுபோன்ற ஆச்சரியங்களைக் கொடுத்து எனது குடும்ப உறுப்பினர்களைப்போல நடத்த விரும்பினேன். இப்போது நான் முழு மகிழ்ச்சி உடன் இருக்கிறேன். ஒவ்வொரு நிறுவன உரிமையாளரும் தங்கள் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை மதிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும் வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த கார், பைக்குகளை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த ஆனந்தக் கண்ணீரில் திளைத்தனர். கடையின் உரிமையாளர் ஜெயந்திலால் சலானி மற்றும் ஊழியர்கள் பலரும் பரிசு பெற்றவர்களை ஆரத்தழுவி வரவேற்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.