கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது.

ப்ரசூன் பாண்டே இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில், “அமிதாப்பின் அற்புதமான இந்த முன்னெடுப்பில் பங்கெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதிலிருந்து வரும் வருமானம், இந்தியத் திரைத்துறையில் இருக்கும் ஒரு லட்சம் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நிவாரணம் தரும். சோனி பிக்சர்ஸ் இந்தியா, கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியோருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.