நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட 20 பேர் கொண்ட இந்திய அணி செல்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடும் 21 பேர் கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரும் அதே சமயத்தில் அங்கு நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்திய ஆடவர் அணியின் போட்டி ஜூன் 18 ம் தேதி துவங்குகிறது, செப்டம்பர் மாதம் 14 ம் தேதி இவர்களுக்கான போட்டி நிறைவடைகிறது.
மகளிர் அணியினர், ஜூன் 16 ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்கின்றனர், ஒருநாள் போட்டி தொடர் ஜூன் 27 ல் துவங்குகிறது பின்னர் துவங்கும் டி-20 போட்டிகள் ஜூலை 15 ல் நிறைவடைகிறது.
இவ்விரு அணிகளும் ஒரே சமயத்தில் மாத கணக்கில் இங்கிலாந்தில் தங்கி பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் இந்த இரு அணிகளும் ஜூன் 3 ம் தேதி ஒன்றாக பயணிக்க இருக்கிறது.
இந்த இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாளர்கள் என்று அனைவரின் குடும்பத்தினரும் இவர்களுடன் பயணம் செய்வதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து இந்த 41 வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தனி விமானத்தில் குடும்பத்தோடு இங்கிலாந்து செல்ல தயாராகி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி பாதியிலேயே நாடு திரும்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்தமுறை சர்ச்சை எழுவது இதனால் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 3 ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள், கொரோனா பாதுகாப்பு விதிகளின் படி அரசு அனுமதி பெற்ற நட்சத்திர விடுதியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மும்பை தவிர வெளிமாநிலங்களை சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஏற்கனவே கடந்த 14 நாட்களாக மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த வீரர்களும் கடந்த ஒரு வாரமாக இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் அனைவரும் மும்பையில் தனிமையில் உள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினரும் அதுபோல் தனிமை படுத்தப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.