டில்லி

பாஜகவின் ஆதரவாளரான அங்குர் சிங் என்பவர் தீவிரவாத தாக்குதல் குறித்து பிரியங்கா காந்தி சிரித்ததாக டிவிட்டரில் பொய் தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரபல டிவிட்டர் பதிவரான அங்குர் சிங் பாஜக ஆதரவு பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.   இவரை டிவிட்டரில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பாஜகவினர் தொடர்ந்து வருகின்றனர்.   மிர்ரர் நவ் ஊடகம் இவரை தொழில்நுட்ப வல்லுனர் என புகழாரம் சூட்டி உள்ளது.   அவருடைய ஒரு சில பதிவுகள் காரணமாக அவருடைய டிவிட்டர் கணக்கு சமீபத்தில் முடக்கப்பட்டு அதன் பிறகு மீண்டும்  செயலுக்கு வந்தது.

நேற்று காஷ்மீர் மாநிலம் புல்வானா மவ்வட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.     இதற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை இதன் காரணமாக மவுன அஞ்சலியுடன் ரத்து செய்தார்.

இந்நிலையில் அங்குர் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ”பிரியங்கா வதேரா பத்திரிகை சந்திப்பில் சிரிக்கிறார்.  இப்படியும் வல்லூறுகள்” என  பதிந்துள்ளார்.  அத்துடன் 11 நொடி வீடியோ ஒன்றையும் பதிந்துள்ளார்.   அந்த வீடியோவில் அவர் மிக மிக நன்றி எனக் கூறி எழுந்து நிற்பதாக காணப்படுகிறது.   இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதல் நடந்ததை ஒட்டி அவர் பேசிய போது, “இந்த பத்திரிகையாளர் சந்திப்பு அரசியல் குறித்து விவாதிக்க நடத்தப்பட உள்ளது என்பதை அறிவீர்கள்.    ஆனால் தற்போது புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்து நமது வீரர்கள் கொல்லப்ப்ட்டுள்ளனர்.  இந்த நேரத்தில் நாம் அரசியல் குறித்து விவாதிப்பது சரி அல்ல.

நமது நாட்டினர் அனைவருமே வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தோள் கொடுக்க தயாராக உள்ளனர் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  மிக மிக நன்றி” எனக் கூறி விட்டு மவுன அஞ்சலி செலுத்தி உள்ளார்.   இந்த வீடியோ பதிவையும் பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த முழு வீடியோவை பார்க்கும் போது பிரியங்கா காந்தி எந்த ஒரு இடத்திலும் சிரிக்கவில்லை என்பது அனைவருக்கும் புலனாகும்.

 

[youtube https://www.youtube.com/watch?v=Ck8D8oX0iYg]