மும்பை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்படுவது இன்னும் தொடர்கிறது.

கடந்த 2,3 வருடங்களாகவே உத்திரப் பிரதேச கிராம மக்களை வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக சிலர் ஏமாற்றி வருகின்றனர்.   இவர்களில் பெரும்பாலோனோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.   அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள்.  கிராமங்களில் வசிப்பவர்கள்.   ஒரு சிலர் அரபு நாடுகளுக்குச் சென்று பணியாற்றுவதைக் கண்டு தாங்களும் அதே போல் பணியாற்றி வறுமையை போக்க எண்ணுபவர்கள்.

இவர்களில் பலர் மும்பை போன்ற நகரங்களுக்கு போலி ஏஜண்டுகளால் அனுப்பப் படுகின்றனர்.   அவர்களிடம் குறைந்தது ரூ. 1 லட்சம் வரை வாங்கிக் கொண்டு போலி விசா, மற்றும் டிக்கட்டுகளைக் கொடுத்து விடுகின்றனர்.  விவரம் அறியாத அப்பாவி மக்கள் அந்த போலி டிக்கட்டுகளுடன் விமான நிலையம் வந்ததும்  பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இதைப் போல் பலர் மும்பை விமான நிலையத்தில் பிடிபடுவதால் மகாராஷ்டிரா போலீசார் பல வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   போலி ஏஜண்டுகளை கண்டுபிடிக்க உத்திரப்பிரதேசத்துக்கு ஒரு போலிஸ் படை அனுப்பப்பட்டுள்ளது.    போலீசாரின் தகவலின்படி சுமார் 30 பேர் கொண்ட குழு இது போன்ற மோசடிகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.