சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிப்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோருடன் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

மகளை காணவில்லை என்று அந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உதகையில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தை அறிந்து அங்கிருந்து மீட்டு வந்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், விடுதி ஒன்றில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் தங்கவைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை தங்கள் மகளை தங்களிடம் ஒப்படைக்காமல் விடுதியில் தங்க வைத்தது ஏன் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் காவல் ஆய்வாளர் உமாசங்கருக்கும் – சிறுமியின் தந்தைக்கும் வாழப்பாடி காவல் நிலையத்திலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியை மிரட்டி அவரது தந்தை மீதே பாலியல் புகார் அளிக்க வைத்துள்ளார் காவல் ஆய்வாளர் உமாசங்கர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட உமா சங்கர் கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து தந்தை வெளியே வந்ததும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சிறுமி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் தன்னை மிரட்டி தனது தந்தைக்கு எதிராக பாலியல் புகாரை பெற்று பழிவாங்கியதாக புகார் அளித்தார்.

மேலும் தனது சித்தப்பா வெளிநாட்டில் இருப்பது கூட தெரியாமல் அவர் மீதும் பாலியல் புகாரில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் வழக்கு பதிவு செய்திருப்பதாக அந்த சிறுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

எனவே தன்னை பயன்படுத்தி தன் தந்தையை பழிவாங்கி சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சிறுமி அனைத்து தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டி தான் கடந்த ஒன்பது மற்றும் பத்தாம் தேதி ஒளிபரப்பானது. எந்த இடத்தில் புகார் அளித்த சிறுமியின் முகத்தை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் இல்லை அந்த சிறுமியின் பெயரை பாலிமர் தொலைக்காட்சி குறிப்பிடவும் இல்லை.

மேலும் தொடர்ச்சியாக வாழப்பாடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் செய்து வரும் தவறுகளை ஆதாரத்துடன் பாலிமர் தொலைக்காட்சி சுட்டிக்காட்டி வந்தது. இ

தனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் செய்தியாளர் வினோத் மற்றும் செய்தி ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது  வாழப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது, காவல் ஆய்வாளர் உமாசங்கர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.

இவ்வாறு பாலிமர் தொலைக்காட்சி கூறி உள்ளது.