சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு உள்ள மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டியதுடன், ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டினார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடை பெற்றது. கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட் டத்தில் கோஷமிட்டனர். மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி , திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். 14 மாதம் திமுக ஆட்சியில் விலைவாசி,சொத்து வரி,மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது எனவேதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கி கொண்டிருக்கிறார். காற்றுக்கு தடை போட முடியாது, அதுபோல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒரு போதும் தடை போட முடியாது” அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு வருகின்றனர். உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல, மக்களுக்கு நன்மை செய்வதற்கானது என்றவர், நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக எனவும், வீட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக. திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டினார்.
வெயிலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால், எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.