கௌஹாத்தி: கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

புதுப்பிக்கப்பட்ட இறுதி என்.ஆர்.சி, அசாமின் இந்திய குடிமக்களை உறுதிப்படுத்தி வெளீயிடப்பட்டது. இதில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டனர். அவர்களில் சிலர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் சில குடும்ப உறுப்பினர்கள்.

1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஐந்தாவது ஜனாதிபதியாக ஃபக்ருதீன் அலி அகமது இருந்தார். ஃபக்ருதீன் அலி அகமதுவின் சகோதரரின் மகனின் குடும்பம் இறுதி என்ஆர்சியில் பட்டியலிடப்படவில்லை. இறுதி என்.ஆர்.சி.யில் அவரது பெயர் பட்டியலிடப்படவில்லை என்று ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் மகன் சஜித் அலி அகமது கூறினார். சஜித் அலி அகமது மட்டுமல்ல, அவரது தந்தையும் அசாம் என்.ஆர்.சி இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்தியா டுடே தொலைக்காட்சியில் பேசிய சஜித் அலி அகமது, “எனது தாத்தாவின் பெயர் இக்ராமுதீன் அலி அகமது, அவர் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் சகோதரர். நான் அவருடைய பேரன். நாங்கள் ரோங்கியா துணைப்பிரிவின் கீழ் உள்ள பார்பாகியா கிராமத்தில் வசிக்கிறோம்.

நாங்கள். உள்ளூர்வாசிகள். எங்கள் பெயர்கள் பட்டியலிடப்படவில்லை, அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். நாங்கள் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள், ஆனால் எங்கள் பெயர்கள் பட்டியலில் இல்லை. ” என்றார்.

என்.ஆர்.சியின் இறுதி பட்டியலில் இருந்து வெளியேறிய 19 லட்சம் மக்களில் பல அரசு ஊழியர்களும் இருந்தனர். ஓய்வுபெற்ற எஸ்பிஐ அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இறுதி என்ஆர்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். 73 வயதான ஓய்வுபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அதிகாரியான சபிமல் பிஸ்வாஸ், இறுதி என்ஆர்சி பட்டியலில் தனது பெயரைக் காணாததால் இப்போது முற்றிலும் உதவியற்றவராகத் தெரிகிறார்.