டில்லி

பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதால் சூரிய பகவான் கோபம் அடைவார் எனக் கூறியதால் பாஜக தொண்டர்கள் சூரிய தகடுகளை உடைத்ததாக வந்த செய்திகள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முகநூலில் ஒரு செய்தி ஒன்று பதியப்பட்டு அதை 15000 பேர் மறு பதிவு செய்துள்ளனர்.    அந்த செய்தியில் அசோக் சக்சேனா என்னும் பாஜக பாராளு மன்ற உறுப்பினர்  சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிப்பதால் சூரிய பகவான் கோவம் அடைவார் என கூறியதாக தகவல் வெளியாகியது.   அத்துடன் ஒரு சிலர் சோலார் தகடுகளை சுத்தியாலும் கம்புகளாலும் உடைப்பதை காட்டும் வீடியோவும் பதியப்பட்டது.

தற்போது அது குறித்த உண்மைத் தகவல்கள் வெளிவந்துள்ளன.   அசோக் சக்சேனா என ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரே இல்லை என தெரிய வந்துள்ளது.   பாஜகவில் அசோக் என்னும் பெயரில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  அவரிகளில் ஒருவர் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் தொகாரே.   மற்றவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அசோக் மகாதியோராவ் ஆகியோர் உள்ளனர்.    மாநிலங்கள் அவையில் பாஜக உறுப்பினர் அசோக் என்னும் பெயரில் கிடையாது.

சூரிய ஒளித்தகடுகளை உடைக்கும் வீடியோ மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டுள்ளது.    கடந்த பிப்ரவரி மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.   தங்களுக்கு சூரிய ஒளித் தகடுகள் பொருத்தியதற்கான ஊதியம் வெகு நாட்களாக தரப்படாததால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் சூரிய ஒளித் தகடுகளை சுத்தியாலும் கம்பாலும் உடைத்துள்ளனர்.    இந்த வீடியோ மாற்று எரிசக்தித் துறை அமைச்சகத்தால் ”ஊதியம் அளிக்காததால் 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை மகாராஷ்டிராவில் உடைக்கப்படது”  என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஆகும்.

ஆம் ஆத்மி கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியான செய்தியை முழுதும் ஆய்ந்து மேற்கூறிய தகவல்களை தெரிவித்துள்ள என் டி டி வி யில் பணி புரியும் கார்கி ராவத் இது போல தவறான தகவல்களை பரப்புவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=E9dSaw2hoeM]