போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

Must read

சென்னை:
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி ஒருவர் கலந்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் தீக்‌ஷா. அவரது தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர், கடந்த 7-ந் தேதி அன்று தனது மகள் தீக்‌ஷாவுடன் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்‌ஷாவின் போலி சான்றிதழ் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்துள்ளார்.

மாணவி தீக்‌ஷா 3 விதமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். தீக்‌ஷா வாங்கிய உண்மையான மதிப்பெண் 27. ஆனால் 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் மதிப்பெண் சான்றிதழில் தீக்‌ஷாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை ஒட்டி போலியான சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறைகேடு. மேலும் இன்னொரு மாணவியின் ரோல் நம்பரையும் மாணவி தீக்‌ஷா தவறாக பயன்படுத்தி உள்ளார். இது 2-வது முறைகேடு. மேலும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டதாக கூறப்படும் அழைப்புகடிதம்கூட போலியானதாக இருக்கலாம். இது 3-வது முறைகேடாக கருதப்படுகிறது.

More articles

Latest article