சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சந்திரயான்-3 திட்டத்தில் தனது பங்கும் இருப்பதாக சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

 

தவிர, தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தருணத்தில் பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் தான் இருந்ததாகவும் அதற்காக சூரத் விமான நிலையத்தில் தனக்கென பிரத்யேக வழி ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பாக உம்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மிதுல் திரிவேதி இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்பதும் அவர் பித்தலாட்டம் செய்ததும் அம்பலமானது.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மிதுல் திரிவேதி வணிகவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் என்றும் தன்னை ஒரு விஞ்ஞானி என்று கூறிக்கொண்டு சுற்றிவருவதும் தெரியவந்தது.

மேலும், தான் நடத்தி வரும் டியூசன் சென்டருக்கு அதிக மாணவர்களை கவர்வதற்காக இதுபோன்ற விளம்பரங்கள் செய்து வந்ததும். அதற்காக உலகின் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றது போல் விசிட்டிங் கார்ட் அடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுமட்டுமின்றி, கடலுக்கு அடியில் துவாரகாவைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்ததாக இவர் ஏற்கனவே ஊடகங்களில் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது.