சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவை அமைச்சர் மூர்த்தி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23ந்தேதி முதல் மானிய கோரிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே செப்.21-ம் தேதிவரை நடைபெற இருந்த கூட்டத் தொடரை, ஒரு வாரம் குறைத்து செப்.13-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் 2 துறைகளின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று இன்று வணிகவரி, பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று அமைச்சர் மூர்த்தி பத்திரப்பதிவு முறைகேட்டை தடுக்கும் வகையில், போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்கிறார்.
இதன்மூலம் போலி பத்திரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட பதிவாளரை நாடும் நடைமுறை மாற்றப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
போலி பத்திரங்களை ரத்து செய்ய பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மண்டல டிஐஜிக்களுக்கே அதிகாரம் வழங்கி கடந்த 2017ஆம் ஆண்டு ஐஜியாக குமரகுருபரன் மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை சட்டமாக நிறைவேற்றினால் மட்டுமே அமலுக்கு வரும் என்பதால், அதற்கான நடவடிக்கையை தமிழகஅரசு எடுத்துள்ளது.