
அகமதாபாத்,
நாட்டில் அதிகபடியான போலி ரூபாய் நோட்டுக்கள் நடமாட்டம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சரே கூறி உள்ளார்.
நாட்டிலேயே அதிக அளவிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் குஜராத் முதலிடம் வகிப்பதாக மத்தியஅரசின் இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். இது பா.ஜ.கவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் சொந்தமாநிலம்தான் குஜராத். அவர் முதல்வராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சி அதிகரித்தது. அதை காட்டிதான், அவர் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதியஜனதாவுக்கு வெற்றிக்கனியை பறித்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டுக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் ஹன்சர் ஜி அஹிர் , ‘போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் குஜராத்தான் முதலிடத்தில் உள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.
மேலுரம், “ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு போலி ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல்செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் ரூ.2.55 கோடி மதிப்பில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.
அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மிசோரம்மில் ரூ.55 லட்சமும், மேற்கு வங்கத்தில் ரூ.44 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி வரையிலான நிலவரம் இது” என்று கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சரின் இந்த பதில் பாரதியஜனதாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.