அகமதாபாத்:
அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது தற்போது நவநாகரீக அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. காசு, பிரியாணி, குவாட்டர் கொடுத்தால் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு வர ஒரு கூட்டம் தயாராக உள்ளது. இந்த சூழ்நிலையில் தொழில்நுட்ப ரீதியாக மண்டை கசிக்கி, யோசித்து, கூட்டத்துக்கு ஏற்றார்போல் மேக்கப் போட்ட கூட்டத்தை கூட்டுவது சினிமாவில் மட்டுமே சாத்தியமாக இருந்தது.
ஆனால், இதை மோடி விசுவாச அதிகாரிகள் நிஜத்திலேயே நிரூபித்துவிட்டனர். கடந்த செவ்வாய் கிழமை குஜராத்தில் சர்வதேச கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், பெரும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக பிரதமரை பாராட்டியும், புகழ்ந்தும் தள்ளிய தொழிலதிபர்கள், தொழில் நிறுவன அதிகாரிகள் இதில் அதிகமாகவே இருந்தனர்.
இது தொடர்பாக குஜராத் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்…..குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சிறப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் பெரும் தொழில் நிறுவன அதிபர்கள் போல் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 450 பேர் கூட்டத்தில் நடுவில் கோட் அணிந்து கார்பரேட் கெட்டப்பில் உட்காரவைக்கப்பட்டனர்.
அதேபோல் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மிடுக்கான உடை அணிந்து இதில் கலந்து கொள்ள கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு அடையாள அட்டையும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடேங்கப்பா.. கூட்டம் கூட்டுவதில் அரசியல்வாதிகளை அதிகாரிகள் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல் தெரிகிறதே……..