சென்னை: ஆர்ஏஎஃப்சி என்ற பெயரில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 8 இடங்களில் கிராமப்புற மற்றும் விவசாய விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலி வங்கிகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடி  செய்து வந்த லண்டனில் படித்த எம்.பி.ஏ பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக செயல்பட்ட கும்பலும் சிக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வங்கிகள் முடக்கப்பட்டு உள்ளதாக காவல்ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வங்கியின் இணையதளமான https://rafcbank.com/index.php  தற்போதுவரை (இந்த செய்தி பதிவிடும் காலை 11 மணி வரை) செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  RAFC -(Rural and Agriculture Farmers Co operative Bank) கிராமப்புற மற்றும் விவசாய விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலி வங்கிகள் செயல்பட்டு, பொதுமக்களிடம் மோசடி செய்து வருவதாக ஆர்பிஐ தரப்பில் சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வங்கி குறித்த  செயல்பாடுகளை கவனித்த காவல்துறையினர், வங்கியை நடத்தி வந்த நபர் உள்பட அவருக்கு உடந்தையானவர்களை கூண்டோடு கைது செய்தது. மேலும், அந்த வங்கியின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டு, வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி தொடர்பான புகாரின் பேரில்,  சென்னை மத்திய குற்றப்பிரிவு  – வங்கி மோசடி புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது, பகுதியில் இந்த வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பத்தூர் பகுதியில், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி ((RAFC Bank / Rural and Agriculture Farmers Co operative Bank)  இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், அந்த வங்கியில் இருந்த ஆர்பிஐ-ன் அனுமதியை ஆய்வு செய்தனர். அதில், அந்த சான்றிதழ் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வங்கி அதிகாரியை மடக்கிய காவல்துறையினர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பகீர் தகவல்கள் வெளியானது. இந்த போலி வங்கி, சென்னை மட்டுமின்றி மேலும் 8 இடங்களில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில்  கிளைகளை பரப்பி, பாமர மக்களிடமும், விவசாயிகளிடமும் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், விருதாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட எட்டு பகுதிகளில் எட்டு கிளைகள் அமைத்து ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் போலியான வங்கி கிளைகளை உருவாக்கி 6.5% வட்டியுடன் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து பின் அதிரடியாக அவற்றை வசூலித்தும் பல்வேறு மோசடி வழிகளில் விவசாயிகளிடம் மோசடி செய்தும் வந்துள்ளனர்.

இந்த வங்கிகள் சுமார் ஒராண்டை கடந்து செயல்பட்டு வந்துள்ளதும், பொதுமக்கள் பணம்  டெபாசிட் செய்ய  பல்வேறு கவர்ச்சிகரமான அழைப்பு விடுத்து, அவர் களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை, நகைக்கடன் வட்டி என பல மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த வங்கி, பல்வேறு தனியார்  வங்கிகளுடன் இணைக்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.  ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து ஏராளமான பண பரிவர்த்தனை  நடந்துள்ளதும்   விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பத்தூர் கிளையில் மட்டும் ரூபாய் 2 கோடி வரை இதுவரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஏழு கிளைகளில் எவ்வளவு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போலி வங்கிகளை வெற்றிகரமாக நடத்திய நபர்,  சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சேர்ந்த சந்திரபோஸ்  என்பது தெரிய வந்துள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இவர்  லண்டனில் எம்.பி.ஏ படித்து அங்கேயே வங்கி துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பதும், பின்னர் அங்கு வேலையை விட்டுவிட்டு, சென்னை வந்து பொதுமக்களை ஏமாற்ற போலி வங்கி தொடங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து  போலி பாஸ்போர்ட்டுகள், போலி பிரின்டிங் மெஷின், போலி பதிவு சான்றிதழ்கள், போலி முத்திரைத்தாள்கள், போலி அரசு முத்திரைகள் மற்றும் விலை உயர்ந்த பென்ஸ் கார் மற்றும் ரொக்கம் ரூ.57 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, வங்கி பணப்பரிவர்த்தனைக்கான மென்பொருள், பில்லிங் மெஷின், பாஸ்புக் மெஷின் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கி அதன் மூலம் வங்கி செயல்பாடுகளை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் விசாரணையில்,  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வங்கிக்கு ஆள் எடுக்கும்போது, அவர்களின் பின்புலத்தை நோட்டமிட்டு, அவரிகளிடம் இருந்து செக்யூரிட்டி தொகையாக ரூபாய் 2லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பணம் பெற்று பெற்றுக்கொண்டு ஏராளமானோருக்கு பணி வாய்ப்பு கொடுத்துள்ளதும், சுமார் 100க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் இந்த வங்கியின் 8 கிளைகளும் நடத்தப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆர்ஏஎஃப்சி வங்கியில்  சுமார் 3000 வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், எட்டு கிளைகளில் மொத்தமாக மோசடி செய்த தொகை எவ்வளவு? எந்தெந்த வங்கிகள் மூலம் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழகம் முழுவதும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி செயல்பட்டுவந்த போலி வங்கிகள் முடக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஊரக மற்றும் வேளாண் விவசாயிகள் கூட்டுறவு வங்கி பெயரில், ஒரு வருடமாக போலியான வங்கி ஒன்றை தமிழகத்தில் கிளைகள் பரப்பி சட்டவிரோதமாக நடத்தி வந்த கும்பலை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு மிகபெரிய அளவில் இருக்கலாம் என தெரிவித்தவர்,  சைபர் குற்றங்கள் குறித்த ‘முத்துவும் 30 திருடர்களும்’ என்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த போலி வங்கி விவகாரம் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன்,  சென்னை போலீசார், சந்திரபோஸ் னு ஒரு ஆளை கைது செஞ்சு, அவரோட பேங்க் அக்கவுண்ட் 56 லட்ச ரூபாயை முடக்கியிருக்காங்க. ஊரக வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கின்னு சொந்தமா ஒரு வங்கிய ஆரம்பிச்சு, இரண்டாயிரம் கஸ்டமர்களையும் பிடிச்சுருக்காரு சந்திரபோஸ். லோக்கல் சிட்பண்ட் கம்பெனிய தொடங்குற கணக்கா பேங்க்கையே உருவாக்கி இவ்வளவு தூரம் டெவலப் ஆகுற வரைக்கும் யாரும் அவரை டிஸ்டர்ப் பண்ணல. ஒருத்தரு போலீசுக்கு புகார் கொடுக்கப் போனபிறகுதான், பேங்க் ‘ரன்’ ஆகுற விஷயமே தெரியுது. ஒரு விஷயம் புரிகிறது எல்லாமே கடினம், வங்கியை ஆரம்பிப்பது எளிது! என கூறியுள்ளார்.